சனி, 29 செப்டம்பர், 2018

புறநானூறு Puranaanooru

புறநானூறு
புறம் + நான்கு+நூறு= புறநானூறு. பறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக்கொண்ட நூல் என பொருளாகும். இஃது புறப்பாட்டு, எனவும் புறம் எனவும் இந்நூல் அழைக்கப்படும்.
      புறமாவது அறத்தையும் பொருளையும் பற்றி கூறுவது. அஃது ஒத்த அன்புடையோரை அன்றி அனைவராலும் அனுபவிக்கப்பட்டு, இத்தகையதென்று புறத்தார்க்கு எடுத்து உணர்த்தக்கூடியதாய் நிகழும் ஒழுக்கமாதலின் புறம் எனப்பட்டது. இத்தகைய புறப்பொருள் தொடர்பான பாடல்கள் இந்நூலில் உள்ளன.
நூலின் இயல்புகள்.
இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்களால் பல்வேறு சமயங்களில் பாடப்பட்டனவாகும். அரசன்முதல் பல்வகை தொழில்புரிவாரும் புலமை மிக்கவராய் பாடல்கள் இயற்றியுள்ளனர். தொல்காப்பியம் என்ற மிகப்பழைய தமிழ் இலக்கணத்திற்கு முற்பட்ட பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு. புலவர்கள் தனித்தனியே பாடிய பாடல்கள் எல்லாம் அரிதின்முயன்று தேடித் தொகுத்த தொகை நூல் இது. இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது இதன் பழமையை உணர்த்தும். இந்நூலை தொகுத்தவர் யாரென்றும் இதுவரை அறியப்படவில்லை.
நூலின் பெருமை.
இந்நூல் தமிழருடைய சிறந்த கருவூலம் ஆகும். ஏனெனில், பண்டைக்கால தமிழ் மக்களுடைய நாகரிகம், அரசியல்,போர்த்திறம், சமூக பண்பாடு, பழக்கவழக்கங்கள்  ஆகியவற்றை நாம் அறிந்துகொள்ள பேருதவி புரிவது இந்நூலே ஆகும். புலவர்கள் பலரால் இந்நூற்பாடல்கள் மேற்கோளாய் எடுத்தாளப்பட்டுள்ளன.