ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

அகநானூறு Aganaanooru

அகம் + நான்கு+ நூறு.
அகப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக்கொண்ட நூல் ஆதலால்இப்பெயர் பெற்றது.
இந்நூல் அகம் எனவும் வழங்கப்படும். இந்நூல் பதின்மூன்றுஅடிமுதல் முப்பத்தோரு அடிவரை "ஆசிரியப்பாக்களால்" தொகுக்கப்பட்டு உருவாகியுள்ளதால் இஃது "நெடுந்தொகை" எனவும் சிலாகிக்கப்படுகிறது.
         அகம்-விளக்கம்:     "அறம்,பொருள், இன்பம், என்பனவற்றுள் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம் உள்ளத்துணர்வால் உணர்ந்து இன்புறக்கூடியதும் புறத்தார்க்கு இத்தகையதென்று எடுத்துக்கூறவியலாததுமாகிய இன்பத்தைப்பற்றிக் கூறுவதே அகம்"
  நூலமைப்பு:
           அகநானூறு என்னும் இந்நூல் "எட்டுத்தொகை" நூல்களுள் ஒன்று. பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்பெருமக்கலால் இயற்றப்பட்டு பின்னர் "உப்புரிகூடி கிழார் மகன் உருத்திரசன்மர்" என்பவரால் தொகுக்கப்பட்டு அமைந்த நூலிது.
    இதனை " பாண்டிமன்னன் உக்கிரப் பெருவழுதி" தொகுப்பித்ததாக அறியப்பெறுகிறது. மேலும்"பாரதம் பாடிய பெருந்தேவநார்"  என்போர் இந்நூலிற்கு "கடவுள் வாழ்த்து" பாடியுள்ளார்.   இந்நாலில் முதல் 120 பாடல்கள் "களிற்றியானை நிரை" எனவும் அடுத்த 180 பாடல்கள்  "மணிமிடை பவளம்" எனவும் அடுத்த 100 பாடல்கள் "நித்திலக்கோவை" எனவும் மூன்று பெரும் பிரிவுகளாய் வகுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்நூலில் உள்ள ஒற்றைப்படை பாடல்கள் யாவும் "பாலைத்திணை பாடல்களாகவும்" இரண்டு எட்டு எண்கள் கொண்ட பாடல்கள் யாவும் "குறிஞ்சித்திணை" பாடல்களாகவும் நான்கு எனும் எண்கள் கொண்ட பாடல்கள் யாவும் "மருதத்திணை" பாடல்களாகவும் பத்து எனும் எண்கள் கொண்ட பாடல்கள்" நெய்தல் திணை" பாடல்களாகவும் தொகுத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
  நூலின் பெருமை
         இந்நூல் பண்டைக்கால இன்பியல் வாழ்க்கையை சுவைபட சித்தரிப்பதுடன் பண்டைத்மிழரின் உயர்ந்த பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்கள், நிலவமைப்பு, அங்கு வாழும் மக்களின் இயல்புகள், தொழில், உணவு, பொழுதுபோக்கு முதலியவற்றை இயற்கை நலம் அமைய எடுத்துரைக்கிறது.  இடையிடையே இயற்கை வர்ணனைகள், உவமைகள், உருவகம், உள்ளுறை, இறைச்சி முதலிய அணி நலங்கள் அமையக் கற்பவர் மனம் களி துளும்பக் கவினுறப் புனைந்து காட்டுகிறது.